ஒட்டுமொத்த உடல்நலத்தையும் நல்வாழ்வையும் பேணுவதற்கு நச்சு நீக்கம் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நச்சுக்கள் சேர்வது: ஆயுர்வேதத்தின்படி, சரியில்லாத செரிமானமும் வளர்சிதை மாற்றமும், சுற்றுச்சூழல் மாசுக்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைப் பழக்கங்கள், மன அழுத்தம் ஆகியவற்றால் உடலில் நச்சுக்கள், அதாவது “ஆமம்,” சேர்கின்றன. இப்படிச் சேரும் நச்சுக்கள் உடலின் இயற்கையான சமநிலையைக் குலைத்து, பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது.
நச்சு நீக்க முறைகள்: உணவு மாற்றங்கள், மூலிகை மருந்துகள், சுத்திகரிப்புச் சிகிச்சைகள் (பஞ்சகர்மா என அழைக்கப்படுபவை), வாழ்க்கை முறை மாற்றங்கள் என நச்சு நீக்கத்திற்குப் பல வழிமுறைகளை ஆயுர்வேதம் வழங்குகிறது. உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடலின் இயற்கையான சமநிலையை மீட்டெடுப்பதே இம்முறைகளின் நோக்கம். பொதுவாகக் கேள்விப்படும் சோதன கர்மாவில் (சுத்திகரிப்புச் சிகிச்சை) வமனம் (வாந்தி மூலம் சுத்திகரிப்பு), விரேசனம் (பேதி மூலம் சுத்திகரிப்பு), ரக்த மோக்ஷணம் (ரத்தம் வெளியேற்றுதல்) ஆகியவை அடங்கும்.
பலன்கள்: ஆயுர்வேத நச்சு நீக்கத்தால் மேம்பட்ட செரிமானம், கூடுதல் சுறுசுறுப்பு, தெளிவான சருமம், சிறந்த மனத் தெளிவு, எடை குறைப்பு, வலுவான நோய் எதிர்ப்பு சக்தி என ஏராளமான பலன்கள் உண்டு என நம்பப்படுகிறது. நச்சுக்களை நீக்கிச் சமநிலையை மீட்டெடுப்பதன் மூலம், உடலுக்கே இயல்பாக அமைந்துள்ள குணமாக்கும் ஆற்றலுக்கு நச்சு நீக்கம் துணை நிற்கிறது; ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ப்பையும் வளர்க்கிறது. உடலின் மேல் பகுதியில் சேர்ந்துள்ள அதிகப்படியான கபத்தையும், நச்சுக்கள்/கெட்டுப்போன தோஷங்களையும் நீக்க வமனம் உதவுகிறது; உடலின் கீழ்ப் பகுதியில் சேர்ந்துள்ள அதிகப்படியான பித்தத்தையும், நச்சுக்கள்/கெட்டுப்போன தோஷங்களையும் நீக்க விரேசனம் உதவுகிறது; ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்க ரக்த மோக்ஷணம் உதவுகிறது. சிரா வேதனம் என்பது ரக்த மோக்ஷணத்தின் ஒரு வகை; வெரிகோஸ் வெயின் (நரம்பு முடிச்சு) நிலைக்குச் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளது.
தனிநபர் சார்ந்த அணுகுமுறை: ஒவ்வொருவரின் தனித்துவமான உடல் அமைப்பு (பிரகிருதி), அதில் ஏற்பட்டுள்ள சமநிலைக் குலைவு (விகிருதி) ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டம் வகுப்பதன் முக்கியத்துவத்தை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரின் குறிப்பிட்ட தேவைகளையும் சமநிலைக் குலைவுகளையும் கவனத்தில் கொண்டு நச்சு நீக்க நெறிமுறைகள் வகுக்கப்படுகின்றன; இதனால் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.



