ஆயுர்வேதத்தில் இஞ்சி (சமஸ்கிருதத்தில் “ஆர்த்ரகம்” என்று அழைக்கப்படுகிறது) அதன் மருத்துவக் குணங்களுக்காக மிகவும் மதிக்கப்படுகிறது; பல்வேறு வகையில் பயன்படும் மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தோஷங்களைச் சமநிலைப்படுத்துதல்: ஆர்த்ரகம் (இஞ்சி) சூடான, வெப்பமூட்டும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. அதனால், குளிர்ச்சியோடும் மந்தமான செரிமானத்தோடும் தொடர்புடைய கபம், வாதம் ஆகிய தோஷங்களைச் சமநிலைப்படுத்த இது சிறப்பாகப் பயன்படுகிறது. இருப்பினும், பித்தம் அதிகம் உள்ளவர்கள் இஞ்சியின் வெப்பத் தன்மையைக் கருதி அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது.

நச்சு நீக்கம்: ஆயுர்வேதத்தின்படி இஞ்சிக்கு நச்சு நீக்கும் குணம் உண்டு எனக் கருதப்படுகிறது. உடலில் தேங்கியுள்ள நச்சுகளை (ஆமம்) நீக்கவும், கல்லீரல் சரியாகச் செயல்படவும் இது உதவி, நச்சு நீக்கும் செயல்பாட்டுக்குத் துணை நிற்கிறது.

மருத்துவப் பயன்கள்:

  • இஞ்சி வலிமையான செரிமானத் தூண்டியாக அறியப்படுகிறது. இது செரிமான அக்னியைத் தூண்டி, சிறந்த செரிமானத்தையும் ஊட்டச்சத்துகள் உடலில் சேர்வதையும் ஊக்குவிக்கிறது. வயிறு உப்புசம், வாயு, அஜீரணம் போன்ற செரிமானத் தொல்லைகளைத் தணிக்க இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
  • ஆயுர்வேதத்தில் சுவாசம் சார்ந்த நோய்களைத் தணிக்கவும் இஞ்சி அடிக்கடி பயன்படுகிறது. சளியைக் கரைத்து வெளியேற்றும், அடைப்பை நீக்கும் அதன் குணங்கள் சுவாசப் பாதையில் உள்ள கட்டியைத் தளர்த்தி நிவாரணம் தருவதால், இருமல், சளி, ஆஸ்துமா போன்ற நிலைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. சுண்டி (சுக்கு) என்பது திரிகடுகு சூரணம்/திரிகடு சூரணத்தின் முக்கியப் பொருட்களில் ஒன்று.
  • இஞ்சிக்கு வலிமையான வீக்கம் தணிக்கும் குணம் உண்டு; உடலில் ஏற்படும் பல்வேறு வீக்க நிலைகளைத் தணிக்க இது உதவும். மூட்டுவாதம் போன்ற நிலைகளில் ஏற்படும் மூட்டு வலியையும் வீக்கத்தையும் குறைக்க இது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
  • உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதாக இஞ்சி அறியப்படுகிறது. இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இது உதவுகிறது; இது இதய நலனுக்குப் பயன் தரக்கூடும், மோசமான இரத்த ஓட்டம், கை கால்கள் குளிர்ந்து போதல் போன்ற நிலைகளிலும் உதவக்கூடும்.
  • ஆயுர்வேதத்தில் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாகக் கருதப்படுகிறது. அதன் வெப்பமூட்டும், தூண்டும் குணங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகளையும் நோய்களையும் எதிர்கொள்ளும் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு, மாதவிடாய் ஒழுங்கின்மை போன்ற தொல்லைகளைத் தணிக்கப் பாரம்பரியமாக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. வலி நீக்கும், வீக்கம் தணிக்கும் அதன் குணங்கள் மாதவிடாய் தொடர்பான வலியையும் அசௌகரியத்தையும் குறைக்க உதவும்.